மாநகராட்சி பள்ளிகளில் சரிந்தது தேர்ச்சி சதவீதம்
கோவை: மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு, 95.71 ஆக இருந்த நிலையில் இவ்வாண்டு, 91.97 சதவீதமாக சரிந்துள்ளது; எனவே, சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 148 பள்ளிகள் உள்ளன. இந்தாண்டு மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும், 17 மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 563 மாணவர்கள், 1,068 மாணவியர் என, 1,631 பேர் தேர்வு எழுதினர்.இதில், 490 மாணவர்கள், 1,010 மாணவிகள் என, 1,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி சதவீதம், 91.97 சதவீதமாக உள்ளது. கடந்த, 2022ம் ஆண்டு தேர்ச்சி விகிதம், 92.17 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, 95.71 சதவீதமாக அதிகரித்த நிலையில் இந்தாண்டு, 3.74 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு, 90 முதல், 100 சதவீதத்துக்குள், 15 பள்ளிகள் இடம்பிடித்தன; ஒரு பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு ஒரு பள்ளி கூட, 100 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை. 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சியுடன், 12 பள்ளிகள் உள்ளன.ஏழை, எளிய மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளையே அதிகம் நம்பியுள்ளனர். மாணவர்கள் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திவருகிறது. அதேசமயம், தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.