மருத்துவ மாணவர்கள் நள்ளிரவு கொண்டாட்டம்: நோயாளிகள் பதட்டம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதியின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வெடிவெடித்ததால், அருகில் உள்ள மகப்பேறு வார்டு கர்ப்பிணிகள் பதறினர்.மருத்துவமனையை ஒட்டியுள்ள விடுதியின் அருகிலேயே மகப்பேறு வார்டு ஆறு தளங்களில் செயல்படுகிறது.ஒவ்வொரு தளத்திலும் பிரசவம் ஆகாத கர்ப்பிணிகள், சுகப்பிரசவம் ஆனவர்கள், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்கள், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் மகளிர் நலத்திற்கான வார்டுகளும் ஆறாவது தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு வார்டும் உள்ளது.மதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்வதால் மருத்துவமனையிலும் கூட்டம் குறைந்திருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஊரே நிசப்தமாக இருந்த சூழ்நிலையில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து வெடிக்கும் வெடியை பற்ற வைத்ததால் சத்தம் நிற்காமல் 5 நிமிடங்களுக்கு மேலாக கேட்டது.ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த கர்ப்பிணிகள், அவர்களது உறவினர்கள், அருகிலுள்ள பிற வார்டு நோயாளிகள் திடீர் வெடி சத்தத்தால் பதறி துாக்கம் தொலைத்தனர். மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனங்கள் ஒலி எழுப்புவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெடிச்சத்தமா என நோயாளிகளின் உறவினர்கள் தவித்தனர்.மகப்பேறு வார்டு அருகே உள்ள மருத்துவ மாணவர் விடுதியில் சில மாணவர்கள் ஒன்று கூடி கொண்டாட்டமாய் வெடி வெடித்தனர் என்பது தெரியவந்தது. இத்தனைக்கும் வளாகத்திற்குள்ளேயே போலீஸ் அவுட்போஸ்ட் இருந்தும் திடீர் சத்தத்திற்கு எந்த போலீசாரும் வெளியில் வந்து எட்டிப்பார்க்கவில்லை.மருத்துவமனை அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவரில் ஒருவர் மருத்துவமனைக்குள் வெடிச்சத்தம் கேட்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவே அங்கிருந்து போலீசார் வந்தனர். அதன்பின்பே அவுட்போஸ்ட் போலீசாருக்கு விஷயம் தெரிந்தது.இதுகுறித்து டீன் பொறுப்பு தர்மராஜிடம் கேட்டபோது, ஹவுஸ் சர்ஜன் முடித்துச் செல்லும் இரண்டு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. வார்டன் மூலம் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.