உள்ளூர் செய்திகள்

நீட் மறுதேர்வு: உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: நீட் நுழைவுத் தேர்வின் போது அனைத்து பகுதிகளிலும் கேள்வித்தாள் வெளியானதற்கான எவ்வித ஆதாரங்கள் இல்லை எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறியுள்ளது.இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில், வினாத்தாள் லீக் ஆனது உட்பட பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான, 40க்கும் மேற்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிந்தது உண்மை தான். பாட்னா மற்றும் ஹசாரிபாக் மையங்களில் வினாத்தாள் கசிந்ததால் 155 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய 19 வது கேள்விக்கு 4வது விடை தான் சரி என நிபுணர்கள் குழு அளிக்கை அளித்து உள்ளது.சென்னை ஐஐடி அளித்த அறிக்கையை ஆய்வு செய்துள்ளோம். நீட் தேர்வு முறையில் விதிமீறல் நடந்தது. ஆனால், தேர்வு கட்டமைப்பில் பெரியளவு மோசடி நடக்கவில்லை. நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது என்பதற்கான ஆதாரங்களும், ரத்து செய்யும் அளவுக்கு போதிய விவரங்களும் இல்லை. மறு தேர்வு நடத்துவது என்பது 24 லட்சம் மாணவர்களை பாதிக்கும். 2 இடங்களில் மட்டும் வினாத்தாள் கசிந்துள்ளதால் மறு தேர்வு அவசியமில்லை. மறு தேர்வு நடத்த உத்தர விட முடியாது. தவறு செய்த மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்