புத்தகத் திருவிழாவில் விற்பனை கடந்தாண்டை விட அதிகம்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகத்திருவிழா செப். 6ல் துவங்கி செப். 17 வரை நடந்தது. 230 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. தினமும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.பபாசி துணைத்தலைவர் புருஷோத்தமன் கூறியதாவது: கண்காட்சியில் 700 க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 42 ஆயிரம் மாணவர்கள் உட்பட 4 லட்சம் பேருக்கு மேல் பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ.3.5 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.கடந்தாண்டு ரூ.3 கோடி அளவுக்கு விற்பனை இருந்தது. இந்தாண்டு மாணவர்களுக்கென 3 ஸ்டால்கள் இடம்பெற்று 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது. இதற்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.மேலும் கண்காட்சியில் தமிழ்நாடு பாடநுால் நிறுவனம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சாகித்ய அகாடமி போன்ற அரசு நிறுவனங்களின் ஸ்டால்களும் இடம் பெற்றது சிறப்புக்குரியது.இவ்வாறு கூறினார்.நிறைவு நாளில் டி.ஆர்.ஓ., சக்திவேல் பங்கேற்று கிராமிய கலைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், செஞ்சிலுவை சங்க அமைப்பினருக்கு பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.