உள்ளூர் செய்திகள்

ஆசியாவில் அதிகாரமிக்க நாடு ஜப்பானை முந்தியது இந்தியா

புதுடில்லி: ஆசியாவில் அதிக அதிகாரமிக்க நாடுகள் பட்டியலில் ஜப்பானை முந்தி, இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி மையம் சார்பில், ஆசியாவில் அதிகாரமிக்க நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி, இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா, முதல் இரண்டு இடங்களில் உள்ளன.தன் வளங்கள் மற்றும் செல்வாக்கு வாயிலாக, ஆசியாவில் அதிகாரமிக்க நாடுகள் என, 27 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. எட்டு முக்கிய காரணிகளின் அடிப்படையில் இவை பட்டியலிடப்பட்டுள்ளன. ராணுவ பலம், பொருளாதார வளம் மற்றும் பொருளாதார உறவுகள், துாதரக மற்றும் கலாசார செல்வாக்கு, எதிர்கால வளங்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இவற்றின் அடிப்படையில், இந்தியா பெரும் முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் அது தன் முழு திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மிகப்பெரும் நிலப்பரப்பு, அதிக மக்கள்தொகை, சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஆகியவை, இந்தியாவுக்கு சாதகமான அம்சங்களாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல், இளைஞர்கள் அதிகளவில் உள்ளதும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்