வேலையை பறிக்கும் அரசாணை; மாற்றுத்திறனாளிகள் வேதனை
கோவை : மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ள அரசாணை, எங்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் உள்ளது என, மாற்றுத் திறனாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கடந்த செப்.,20ம் தேதி அரசாணை எண்: 21 வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் புத்தக கட்டுநர் பதவியில் 34 சதவீதமும்; பொது நூலகத் துறையில் 75 சதவீதமும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பணியில் உள்ளனர்.அரசின் 4 சதவீத இட ஒதுக்கீட்டை விட, கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்படுவது, மாற்றுத்திறன் இல்லாத ஏனையோரின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிப்பதாக உள்ளது. பொது நூலகத்துறை, மின் நூலகமாக வளர்வதுடன், நூல்கள் மின்மயமாக்கப்படுவதால், நூல்கட்டும் பணி குறைந்து வருகிறது.பூந்தமல்லி அரசினர் தொழில்பயிற்சி மையத்தில் பயிற்றுவிக்கப்படும் பார்வையற்றோருக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சியை தொடர்ந்து நடத்தினால், பயிற்சி முடித்தவர்களுக்கு அரசுப்பணி வழங்க இயலாது. எனவே, இப்பயிற்சி 2024-25 முதல் நிறுத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணைக்கு, மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகளின் வாய்ப்புகளை பறிக்கும்தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தென்னிந்திய திட்ட இயக்குநர் மனோகரன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் துறையின் இந்த அரசாணை, மேலோட்டமாக பார்த்தால் , புத்தகம் கட்டுநர் பயிற்சியை நிறுத்துவதாக மட்டும் தோன்றும். ஆனால், இது அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் பாதிக்கும் வகையில் உள்ளது. மாற்றுத்திறனாளிகளால் மற்றவர்களின் வேலைவாய்ப்பு, பறிபோவதைப் போல குறிப்பிட்டிருப்பது, தவறான புரிதலை ஏற்படுத்தும். மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இந்த அரசாணையை, திரும்பப் பெற வேண்டும். முதல்வரின் பொறுப்பில் இருக்கும் ஒரு துறையில், இப்படியொரு அரசாணை வெளியானது அதிர்ச்சியளிக்கிறது, என்றார்.