ஆய்வு மாணவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை: கவர்னரிடம் புகார்
திருச்சி: பாரதிதாசன் பல்கலையில் பிஎச்.டி., படிக்கும் மாணவர்களை மனிதர்களாக மதிப்பதில்லை என்று, பல்கலை பட்டமளிப்பு விழாவில், பட்டம் வாங்கியவர் கவர்னரிடம் புகார் அளித்தார்.திருச்சி பாரதிதாசன் பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 520 பேருக்கு பட்டங்கள் வழங்கி பேசினார். விழாவில், முனைவர் பட்டம் பெற்ற, திருச்சியை சேர்ந்த இஸ்ரேல் இன்பராஜ் என்பவர், பட்டத்தை வாங்கிய பின், தன் பாக்கெட்டில் வைத்திருந்த கடிதம் ஒன்றை கவர்னர் ரவியிடம் வழங்கினார்.கவர்னர் அதை வாங்கி, தன் உதவியாளரிடம் கொடுத்தார். பட்டம் வாங்க வந்தவர் திடீரென கடிதம் கொடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.கடிதம் குறித்து இஸ்ரேல் இன்பராஜ் கூறியதாவது: நான் மனித வள மேலாண்மை துறையில் ஆய்வு படிப்பு படித்துள்ளேன். பல்கலையில் பிஎச்.டி., படிக்க அனுமதி கடிதம் வாங்கவே, ஐந்து முறை சென்னையில் இருந்து வந்து சென்றேன். எனக்கான கைடு, வழிகாட்டுதல் படி தான், ஆய்வுப்படிப்பை துவங்கினேன். ஆனால் சிறிது காலத்துக்கு பின் சரியான வழிகாட்டுதல் இல்லை. இதே நிலை தான் எல்லா துறைகளிலும் உள்ளது.பல்கலையின் ஆய்வுத்துறையினர் மாணவர்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருபவர்களிடம் கூட கருணை காட்டாமல், துன்புறுத்துகின்றனர். அதிக நேரம் காக்க வைக்கின்றனர்.பல்கலையின் ஆய்வுத்துறையினர் பிஹெச்.டி., மாணவர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. சர்வ சாதாரணமாக மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. பட்டமளிப்பு விழாவை கூட தெரிவிக்கவில்லை. நாங்களே தெரிந்து, விண்ணப்பித்து பட்டம் பெற வந்துள்ளோம்.முனைவர் பட்டம் பெற, 4 ஆண்டுகள் தான். ஆனால் இங்கு, 6 முதல், 9 ஆண்டுகள் ஆகின்றன. வேண்டும் என்றே இத்தனை ஆண்டுகள் அலைக்கழித்து பட்டம் வாங்க வேண்டியுள்ளது. இதே முனைவர் பட்டம் வெளியே விற்கப்படுகிறது. இதுபோன்ற அவலங்களை புகார் அளித்தால், அந்த மாணவர் பட்டம் பெற முடியாது. ஆய்வுத்துறையினர் மாணவர்களை அவமானப்படுத்துகின்றனர். இதை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லவே புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, சேலம் பெரியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்பவர், பிஎச்.டி., மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து, கவர்னரிடம் புகார் அளித்தார்.