பள்ளி இடைநின்ற மாணவர்கள் பெரும்பாக்கத்தில் கணக்கெடுப்பு
சென்னை: பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 200 ஏக்கர் பரப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, வாரிய சமுதாய வளர்ச்சி பிரிவு செயல்படுகிறது. ஆனால், கஞ்சா விற்பனை, ரவுடிகளால் இளைஞர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இது தொடர்பாக வழக்கு, உயர் நீதிமன்றத்தில் உள்ளது.கடந்த மாதம், அங்குள்ள குடியிருப்புகளில் 250க்கும் மேற்பட்ட போலீசார், கஞ்சா சோதனை நடத்தினர். தொடர்ந்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, தன்னார்வ அமைப்புகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, கஞ்சா விற்பனை, பள்ளி செல்லா மாணவர்கள், பெண் குழந்தை திருமணம், பெற்றோர் கவனிப்பில்லாத குழந்தைகள், இருட்டால் நடக்கும் குற்றச்சம்பவங்கள், காவலர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, தன்னார்வ அமைப்புகள் பேசினர்.தொடர்ந்து, பகுதிமக்கள், நலச்சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர், குற்றச் சம்பவங்கள் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், போலீசார் மற்றும் வாரியம் இணைந்து, பள்ளி செல்லா மாணவ - மாணவியர் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இதற்கு, பெரும்பாக்கம் ஆப்ரேசன் என பெயர் வைத்துள்ளனர்.வீடு வீடாக படிவம் வழங்கி, அதில் குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, அவர்கள் படிப்பு, குழந்தைகள் படிப்பு, பள்ளி பெயர் மற்றும் பள்ளி செல்லாதவர்கள் பெயர் குறித்த விபரம் கேட்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பெற்றோர் வேலைக்கு செல்வதால், அவர்களால் பிள்ளைகளை கண்காணிக்க முடியாத நிலை, பல குடும்பங்களில் ஏற்படுகிறது. அதுபோன்ற பிள்ளைகளின் வாழ்க்கை, தவறி செல்லும் சூழல் நிலவுகிறது. அனைவரும் பள்ளி, கல்லுாரி செல்வதை உறுதி செய்ய, கணக்கெடுப்பு நடத்துகிறோம்.பெற்றோர், பிள்ளைகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி, தேவையான உதவிகள் செய்து, படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ - மாணவியரை மீண்டும் பள்ளி, கல்லுாரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தனித்திறனை கண்டறிந்து, அதற்கான பயிற்சி வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.