டிஜிட்டல் பயிர் சர்வே; தனியாரிடம் வழங்க யோசனை!
திருப்பூர்: டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட வருவாய்த்துறையினர் முன்வராத நிலையில், தனியார் வாயிலாக இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என, வேளாண் துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து வேளாண் துறையினர் கூறியதாவது:நாடு சுதந்தரம் அடைந்த காலம் முதல் கிராம நிர்வாக அலுவலர்களே, நிலம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பது; அதுதொடர்பான பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட நிலம் தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர்.மாநிலத்தில், மொத்த வேளாண்மை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை, 17,842.அனைத்து கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் உள்ளது. இவர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் உள்ளனர். அந்தந்த கிராமங்களின் மக்கள் தொகைக்கேற்ப, 1 - 3 பேர் வரை உதவியாளர்கள் உள்ளனர். பிரத்யேக அலுவலகம், லேப்டாப் உள்ளிட்ட வசதி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகளை கண்காணிக்க, 15 முதல், 20 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய, 1,127 வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன.தாலுகா அளவில் தாசில்தார், கோட்ட அளவில் ஆர்.டி.ஓ., மாவட்ட அளவில் டி.ஆர்.ஓ., கட்டுப்பாட்டில், அரசு இயந்திர கட்டமைப்பு செயல்படுகிறது. இவர்கள் தான், விவசாய நிலங்களின் புல எண் அடிப்படையில், பயிர் வாரியாக குறுவை, சம்பா என்ற சாகுபடி அடிப்படையிலும், காரிப், ரபி பருவம் என பதிவிட்டு, சாகுபடி பதிவு ஒத்திசைவு செய்யப்படுகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில் தான் ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு உறுதி செய்யப்பட்டு, மாநில அரசுக்கு சாகுபடி விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.நம்பகத்தன்மை!இந்த பணியின் உண்மை தன்மையை உறுதிசெய்து, விவரங்களை கம்ப்யூட்டமயமாக்கும் நோக்கில் தான், மத்திய அரசு, டிஜிட்டல் பயிர் சர்வே மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. இப்பணியை செய்து முடிக்க, ஒரு பதிவுக்கு, 10 ரூபாய் கட்டணம் வழங்கவும், கம்ப்யூட்டர் தெரிந்த உதவியாளரை பணியமர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இப்பணியை மேற்கொள்ள வி.ஏ.ஓ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலகட்ட போராட்டம் நடத்தினர்.இப்பணி தொய்வடைந்தால் மத்திய அரசிடம் வர வேண்டிய பெரும் தொகை தடைபடும். இதனால், துறை சார்ந்த பணியில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் வேளாண் துறைக்கு ஏற்பட்டது. இதனால், வேளாண் துறை அலுவலர்களை கொண்டும், வேளாண் மற்றும் தோட்டக்கலை பல்கலை மாணவர்கள் வாயிலாகவும் டிஜிட்டல் சர்வே மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தனியாருக்கு வழங்கலாம்!கிராம அளவில் புல எண்கள், உட்பிரிவு எண்களுக்கு நேரில் சென்று, பிரத்யேக செயலி வாயிலாக விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, மாணவர்களுக்கு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இப்பணியில் மாணவர்களை ஈடுபடுத்த கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மாணவர்களும், தினமும், 90 முதல், 100 கி.மீ., பயணித்து பணி செய்வதில் சோர்ந்து விடுகின்றனர். உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்; அவர்களது பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்று, தனியார் நிறுவனத்தினர் வாயிலாக இப்பணியை மேற்கொள்ள தமிழக அரசு முன் வரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.