மாணவியர் விடுதியில் நுழைந்த நபர்;போலீசார் விசாரணை
செம்பட்டி: சேடபட்டி அரசு மாணவியர் விடுதி பாதுகாப்பு பிரச்னையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.சித்தையன்கோட்டை அருகே சேடபட்டியில் சின்ன பகவதிஅம்மன் கோயில் பின்புறத்தில் டி.என்.சி., அரசு மாணவியர் விடுதி உள்ளது. திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்பட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 18 மாணவியர் இங்கு தங்கி நிலக்கோட்டை, சின்னாளபட்டி, காந்திகிராமம், திண்டுக்கல், வத்தலகுண்டு உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். இந்த வளாகத்தின் பின்புறத்தில் போதிய பாதுகாப்பற்ற நிலையில் சுற்றுச்சூழல் அமைந்துள்ளது.அடிக்கடி மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக மாணவியர் புகார்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று கழிப்பறை பகுதியில் ஒருவர் அலைபேசியில் படம் பிடிப்பதை மாணவியர் பார்த்துள்ளனர். கூச்சலிட்டதால் சம்பந்தப்பட்ட நபர் தப்பினார். செம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்தனர். தப்பி ஓடிய நபர் குறித்து வளாகத்தை சுற்றி அமைந்துள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.