சிறார் குற்றங்களில் தமிழகம் நான்காமிடம்; ஆட்டிப்படைக்கும் போதைப்பொருட்கள்
சென்னை: சிறார் குற்றங்களில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது என தமிழ்நாடு மனநல மருத்துவ சங்கத்தின், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:நம் நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில், 18 வயதுக்கு உட்பட்டோர், 33 சவீதம் பேர் உள்ளனர். இவர்களில், 6 -7 சதவீதம் பேர், குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில், ஆண்கள், 80; பெண்கள், 20 சவீதம் பேர் என்ற வகையில் உள்ளனர். சிறார் குற்றங்களில், மேற்கு வங்கம், உ.பி., பீஹாருக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது.தமிழகத்தில், 16.4 சதவீத இளம் வயதினர் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தென்மாநிலங்களில் நடக்கும் சிறார் குற்றங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, சிறார்களிடம், வன்முறை, போதைப்பழக்கம், பெரும் பிரச்னையாக உருவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.ஒரு லட்சம் சிறார்களில், 17 சதவீதம் பேருக்கு, எளிதில் கோபப்படுதல், உடல் ரீதியாக தாக்கும் குணம் உள்ளது. மேலும், 44 சதவீதம் பேருக்கு, பிறரை கோபப்படுத்தும் வகையில் திட்டுவது உள்ளிட்ட பழக்கம் இருக்கிறது; 15 சதவீதம் பேருக்கு, பாலியல் ரீதியான தவறான எண்ணங்கள் உள்ளன.அத்துடன், சிறார்களில், 14 - 18 வயதுக்கு உட்பட்டோரில், 50 சதவீதம் பேர், ஒரு முறையேனும் போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மன நல சிகிச்சைக்கு வருவோரை கண்காணித்ததில், போதைப்பழக்கம் சிறார்களை ஆட்டிப்படைப்பது தெரிய வருகிறது.சிறார்கள் முன் பெற்றோர் சண்டையிடுவது, மது, புகைப் பழக்கம், கூடா நட்பு, வசிப்பிட சூழல் உள்ளிட்ட காரணங்களால், சிறார்கள் வழி மாறக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், சிறார்களின் நடவடிக்கைகள் குறித்து, கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்காக நாங்களும் அவர்களுக்கு பயற்சி அளித்து வருகிறோம். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.