இன்னும் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யும்: நாஸ்காம்
புதுடில்லி: டி.சி.எஸ்., நிறுவனத்தைத் தொடர்ந்து இன்னும் பல ஐ.டி., நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என, நாஸ்காம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்குள் 12,000 ஊழியர்களை பணி நீக்க உள்ளதாக டி.சி.எஸ்., நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்தது.இதுகுறித்து நாஸ்காம் தெரிவித்துள்ளதாவது:செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் பயன்பாடு ஆகியவை, ஐ.டி., துறையின் செயல்பாட்டை தீர்மானிக்கும் முக்கிய இடத்துக்கு முன்னேறி வருகின்றன.வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களது டெலிவரி மாடல்கள், கண்டுபிடிப்பு மற்றும் சேவை வழங்கும் வேகத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதனால் அடுத்த சில மாதங்களில் ஐ.டி., துறையில் பணி நீக்கங்கள் அதிகரிக்கக் கூடும்.இருப்பினும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ஒவ்வொரு மாற்றமும் புதிய வேலை மற்றும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.இதனிடையே, டி.சி.எஸ்., நிறுவனம், ஆண்டு தோறும் வழங்கும் சம்பள உயர்வு மற்றும் லேட்டரல் ஹயரிங் எனும் அனுபவம் வாய்ந்த நபர்களின் பணியமர்த்தலையும் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.