பட்டியலின மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு: வி.சி.,
சென்னை: 'வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல், பட்டியலின மாணவர்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, 'ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்' திட்டத்தில் மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பட்டியலினத்தவர்கள், அறிவிக்கப்படாத நாடோடி மற்றும் பழங்குடியினர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் போன்ற சமூக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்ட பயனாளர்களாக, 2021 வரை 100 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின், 125 ஆக அதிகரிக்கப்பட்டது. இதில், பட்டியலினத்தவர்களுக்கு 115 பேருக்கும், நாடோடி பழங்குடியினருக்கு ஆறு பேருக்கும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நான்கு பேருக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.கடந்து ஏழு ஆண்டுகளாக, கல்வி உதவித்தொகை பெற, 800 பேருக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், 531 பேர் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். இதில், 236 பேர் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக மாணவர்கள் 25 பேருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.ஆண்டுக்கு, 500க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பித்தும், அனுமதிக்கப்பட்ட அளவில் கூட, மத்திய அரசு கல்வி உதவித் தொகையை வழங்கவில்லை. இது, பட்டியலின மாணவர்களின் உயர் கல்வியை பாதிக்கும் செயல். இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல், மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.