உள்ளூர் செய்திகள்

கருப்பு உடை அணிந்து சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

சென்னை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் காத்திருப்பு போராட்டம், சென்னையில் நேற்று துவங்கியது.சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் நடந்த போராட்டத்தில், கருப்பு உடை அணிந்த ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்கத்தின் மாநில தலைவர் செல்லத்துரை கூறியதாவது:சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் களின் வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். குறிப்பிட்ட சில கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.எங்களது பிரதான கோரிக்கையான காலமுறை ஊதியம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதாக, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மறந்து விட்டார்.அதை அவருக்கு நினைவூட்ட, பலகட்ட போராட்டங்களை நடத்திஉள்ளோம். இருப்பினும், வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் முன்வராதது வேதனையாக உள்ளது.சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் ஊழியர்களை, இவ்வாறு போராட வைப்பது முறையல்ல. கொத்தடிமை முறையில், அரசு எங்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும்.எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களது போராட்டத்திற்கு ஓடோடி வந்து ஆதரவளித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது மவுனம் காப்பது கண்டனத்திற்குஉரியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்