பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்கா குன்னுாரில் துவக்கம்
குன்னுார்: பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்கா குன்னுாரில் நேற்று துவங்கப்பட்டது.குன்னுார், கோத்தகிரி சாலை, ஸ்பிரிங் பீல்டு பகுதியில், பட்டு வளர்ச்சி துறை சார்பில், 5 ஏக்கரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.இங்கு மல்பெரி நாற்றங்கால் உற்பத்தி முதல் பட்டு சேலை உற்பத்தி வரை தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மல்பெரி நடவு செய்தல், பட்டுப்புழு வளர்ப்பு பட்டுக்கூடு அறுவடை, பட்டு நட்பு மற்றும் பட்டு நெசவு வரை செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. பூங்காவிற்கு வருகை தரும் குழந்தைகள் கண்டு மகிழ 'மெய்நிகர்' சாதனம் மற்றும் வண்ணப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில் அரசு கொறடா ராமச்சந்திரன், திறந்து வைத்து கூறுகையில், “ஊட்டி தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா பயணிகள் தேயிலை பூங்காவிற்கு விரும்பி செல்வது போல் குன்னூர் சிம்ஸ் பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் 'பட்டு உலகம் பொழுதுபோக்கு பூங்காவிற்கு' வருகை தருவர்.குன்னூரில் சிறந்த சுற்றுலா தளமாக மாறும். பட்டு வளர்ப்பு பற்றிய அறிவியல் செயல்முறைகள் அறிந்து கொள்ளலாம். மேலும் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதால் அந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னர், கட்டணம் நிர்ணயிக்கப்படும்,” என்றார். விழாவில், பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் நிஷாந்தி, உதவி இயக்குனர்கள் செல்வி, பொன்மாரி உதவி ஆய்வாளர் சபரிஷ், நகராட்சி தலைவி சுசீலா உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.