உள்ளூர் செய்திகள்

அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டுகோள்

கரூர்: அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களை சேர்க்க, கலெக்டர் ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் புன்னம், சின்னமநாயக்கன்பட்டி, கோட்டமேடு, மாவத்துார், நந்தன்கோட்டை, சணப்பிரட்டி, நெய்தலுார், தெலுங்கப்பட்டி, ராஜபுரம், துளிப்பட்டி, சாந்துவார்பட்டி, கள்ளப்பள்ளி, ஆண்டிப்பாளையம், கே.பேட்டை, மேலப்பாளையம், கீழவெளியூர், கழுகூர் ஆகிய ஊர்களில் தொடக்கப் பள்ளிகளும், திருக்காம்புலியூர், பிள்ளாபாளையம் ஆகிய ஊர்களில் நடுநிலைப் பள்ளிகளும், மாவத்துார், நந்தன்கோட்டை, சணப்பிரட்டி, நெய்தலுார், தெலுங்கப்பட்டி ஆகிய ஊர்களில் உயர்நிலைப் பள்ளிகளும், புன்னம், சின்னமநாயக்கன்பட்டி, கோட்டமேடு ஆகிய ஊர்களில் மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம், 27 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் 2024 - 25ம் கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வில் புன்னம், சின்னமநாயக்கன்பட்டி, கோட்டமேடு மேல்நிலைப்பள்ளிகள், மாவத்துார், சணப்பிரட்டி, நெய்தலுார் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில், 20 சதவீதம் முன்னுரிமை, 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி பயில, 7.5 சதவீதம் முன்னுரிமையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல்வேறு சலுகைகளும், விடுதி வசதிகளும் வழங்கப்படுவதால் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அருகாமையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்த்திட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்