நீட் தேர்வு மோசடி கும்பல் சென்னையில் பதுங்கல்?
சென்னை: மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாளை கசியவிட்டது தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், லாத்துாரைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் சிவ்ராஜ் மொடெகாவ்கர் உட்பட, 11 பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சிவ்ராஜ் மொடெகாவ்கர், ஆர்.சி.சி., ரேணுகாய் என்ற பெயரில், பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். இவருக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பது, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்த போது, அதில், நீட் தேர்வு நடப்பதற்கு முன்பே, வினாத்தாள் அவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இவர், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சிக்கியதும், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், தலைமறைவாகி உள்ளனர்.இக்கும்பல் சென்னையில் பதுங்கி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், டில்லி மற்றும் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ., அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.