உள்ளூர் செய்திகள்

கட்டண விபரத்தை விளம்பரப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

சென்னை: 'தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டண விபரங்களை, சம்பந்தப்பட்ட பள்ளி இணையதளத்திலும், பள்ளி நுழைவாயிலிலும் விளம்பரமாக வெளியிட வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறைக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.கோவை மாவட்டம், சேரன் மாநகரைச் சேர்ந்தவர் லியாகத் அலி. இவர், 2022 அக்டோபரில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரங்கள் குறித்து, தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.அவரது மனுவை, அதிகாரிகள் முறையாக கையாண்டு தகவல் வழங்காமல், ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாற்றி மாற்றி அனுப்பி இழுத்தடித்துள்ளனர்.இதனால், மனுதாரர் மேல்முறையீடு செய்தார். அம்மனு, மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு பின், இளம்பரிதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கோரிய முழுமையான தகவல்களை தயாரித்து, இரு வார காலத்திற்குள், கட்டணமின்றி விரைவு தபால் மூலம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழங்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சி.பி.எஸ்.இ., மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விபரங்களை, பொது மக்கள் கேட்காமலேயே பள்ளி நுழைவாயில் விளம்பர பலகையிலும், பள்ளி இணையதளங்களிலும், சேர்க்கை விண்ணப்ப படிவங்களிலும், வகுப்பு வாரியாக பிரித்து, கட்டாயமாக அச்சடித்து வெளியிட வேண்டும்.இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்து, உறுதிப்படுத்திய விபர அறிக்கையை, வரும் ஜூன் 15ம் தேதி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்