பள்ளிகளில் ஷூட்டிங்கிற்கு தடை; கல்வித்துறை உத்தரவு பிறப்பிப்பு
பெங்களூரு: அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில், திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த, கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.இது குறித்து, கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் அவ்வப்போது திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகள் நடக்கின்றன. இதை காண கூட்டம் சேர்கிறது.வகுப்புகள் நடக்கும் நேரத்தில், படப்பிடிப்பு நடப்பதால், சிறார்களின் கல்விக்கு தொந்தரவு ஏற்படுகிறது.சில நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிறது. படப்பிடிப்புகளால் பள்ளிகளின் செயல்பாட்டுக்கு, இடையூறு ஏற்படுகிறது.சில இடங்களில், படப்பிடிப்புக்கு பள்ளி சிறார்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இது குறித்து, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பிள்ளைகளின் மனநிலை பாதிப்படுவதாக கூறியுள்ளனர். சிறார்களின் பாதுகாப்புக்கும் இது நல்லது இல்லை.எந்த காரணத்தை கொண்டும், அரசு பள்ளிகள் மற்றும் வளாகங்களில் திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு, குறும்படம், ஆவண படப்படிப்புக்கு அனுமதி அளிக்க கூடாது. பள்ளி கல்வித்துறை மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், ஆண்டு கல்வி செயல்பாடு தொடர்பான அட்டவணையை அனுப்பியுள்ளது.வகுப்பு நேரம், பாடங்கள் சாராத செயல்பாடுகள், விடுமுறை நாட்கள் குறித்து, விதிமுறைகள் நிர்ணயித்துள்ளது. ஆனால், படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.