தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டல் மையம் துவக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப வழிகாட்டல் மையம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பொறியியல் கழகத்துடன் கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.இந்த கையொப்பம் மூலம், எம்.டெக்., பட்டப்படிப்புகளுக்கு வழிவகுக்கும் ஒரு மாற்றுப் படிப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். மாணவர் நலப் பொறுப்பு பேராசிரியர் ஞானோ ப்ளோரன்ஸ் சுதா வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக தெற்காசிய அலுவலக தலைவர் வித்யா சுரேஷ் வருகை தந்து மாணவர்களிடம் உரையாடல் நடத்தினார். பின் அவர் பேசுகையில், மாணவர்களிடம் ஸ்கூல் ஆப் எலக்ட்டிரக்கல் பொறியியல் கல்லுாரியில் வழங்கப்படும் உயர்கல்வி வாய்ப்புகள், கல்வி முறைகள், கட்டணம் மற்றும் கல்வி உதவித்தொகை குறித்து விளக்கினார். கட்டண சலுகைகள் வழங்கப்படுவதாலும், வெளிநாட்டில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பிரான்ஸ் மாற்று படிப்பு தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.