கோவை மாவட்ட கல்வி அதிகாரி ஆஜராக உத்தரவு
உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள அப்பல்லோஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் தாளாளர் ஜெபதோனி டேவிட் தாக்கல் செய்த மனு:முதலாம் ஆண்டு தேர்வு எழுத, எங்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், முன்பகை காரணமாக பழி வாங்கும் நோக்கில் மாணவர்களை தேர்வு எழுத, கோவை மாவட்ட கல்வி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சுப்ரமணியன் அனுமதிக்கவில்லை. கோர்ட் உத்தரவு பற்றி மாவட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவித்தும், அவர் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டேன் என கூறினார். மாவட்ட அதிகாரி சுப்ரமணியனின் செயல், கோர்ட்டை அவமதிப்பது போலாகும். கோர்ட் உத்தரவை அவர் மதிக்கவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட பாடத்துக்கு துணைத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி சிவகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் ஆஜரானார். அடுத்த மாதம் 4ம் தேதி கோர்ட்டில் ஆஜராக, கோவை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி சுப்ரமணியனுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.