அதிக எழுத்து பிழைகளுடன் போலீஸ் தேர்வு வினாத்தாள்
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3ம் தேதி இரண்டாம் நிலை ஆண், பெண் போலீசாருக்கான எழுத்து தேர்வு நடந்தது. ஒரு மணி நேரம் 20 நிமிடம் எழுதும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருந்தது. பொது அறிவு பகுதியில் ஒன்பதாவதாக ‘இந்தியா சுதந்திரம் பெறும் போது இங்கிலாந்து பிரதமராக இருந்தவர்’ என்ற கேள்வியும், 12வதாக ‘இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நடைபெறும் நதி’ என்ற கேள்வியும், 24வதாக ‘ராணுவ ஆட்சி நடைபெறும் நாடு’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. இவற்றில், ‘பெறும்’ என்பதற்கு பதிலாக ‘பெரும்’ என பிழையாக அச்சிடப்பட்டு இருந்தது. 21வது கேள்வியில், ‘உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம்’ என்பதில் ‘உள்ளாட்ச்சி’ என பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. 35வது கேள்வியில், ‘வறண்ட காற்றில் ஒலியின் வேகம், ஒரு மணித்துளிக்கு சுமார்’ என்பதில் ‘வறண்ட’ என்பதற்கு பதில் ‘வரண்ட’ என்றும், 43வது கேள்வியில், ‘மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக் காரணம்’ என்பதில், ‘மழைத்துளிகள்’ என்பதற்கு பதில் ‘மழைத்துழிகள்’ எனவும், 46வது கேள்வியில், ‘ஹைட்ரஜன்’ என்பதற்கு பதில் ‘ஹைற்றஜன்’ எனவும் பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. உளவியல் பகுதியில் 66வது கேள்வியில், ‘வறுமையிலிருக்கும்’ என்பதற்கு பதிலாக ‘வருமையிலிருக்கும்’ எனவும், ‘வல்லுநர்கள்’ என்பதற்கு பதிலாக ‘வள்ளுனர்கள்’ எனவும், அடுத்த தலைப்பில் நிற்பது என்பதற்கு பதிலாக ‘நிற்ப்பது’ எனவும், 80வது கேள்வியில், ‘எவ்வாறு’ என்பதற்கு பதில் ‘எவ்வாரு’ எனவும் அச்சிடப்பட்டு இருந்தது.