பல்கலை., மதிப்பெண் சான்றிதழ்களை ‘தரமுறையில்’ வழங்க நடவடிக்கை
காரைக்குடி: உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்கலை.,களில் இக்கல்வியாண்டு (2008-09) முதல் தரமுறையில் (கிரேடிங் மெத்தேட்) மதிப்பெண் வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, காரைக்குடி, காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 21 பல்கலை.,கள் செயல்படுகின்றன. இப்பல்கலை.,களின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை தேர்வு முடிவுக்கான பட்டியலில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. ‘தற்போது வழக்கத்தில் உள்ள இந்த மதிப்பெண் சான்றிதழ் முறையில் வெளிநாடுகளில் பணி மற்றும் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கல்வி உலகமயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாற்றம் செய்யவேண்டியுள்ளது. அனைத்து பல்கலை.,யும் கலந்து ஆலோசித்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் தேர்வு முடிவுக்கான சான்றிதழில், மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக ‘தரமுறை’யினை கடைபிடிக்க பல்கலை.,களுக்கு அறிவுறுத்தப்படும்’ என கல்வி மானியக்கோரிக்கையில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அரசு செயலர் உத்தரவு: இதன்படி தமிழக பல்கலை.,களில் இக்கல்வியாண்டு (2008-09) முதல் மதிப்பெண் சான்றிதழில் ‘தரமுறை’யினை செயல்படுத்துமாறு அந்தந்த பல்கலை.,பதிவாளர்களுக்கு அரசு உயர்கல்வித்துறை செயலர் க.கணேசன் உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், தரமுறைப்படி எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்பது குறித்து அறிவிப்புகளை அரசு வெளியிட்ட பின்னர் புதிய முறையில் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலை.,உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.