முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக வைத்திருக்க உத்தரவு
சென்னை: முதுநிலை வணிகவியல் ஆசிரியர் பணியிடங்களில் மூன்று இடங்களை பார்வையற்றோருக்கு காலியாக வைத்திருக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, மதுரை அத்திகுளத்தைச் சேர்ந்த முத்துமணிவண்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் பார்வையற்றவர்கள். வணிகவியல் படிப்பில் முதுகலை பட்டம், பி.எட்., எம்.பில்., பட்டங்களைப் பெற்றுள்ளோம். பார்வையற்றோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அரசு பள்ளிகளில், தமிழ் மற்றும் வரலாற்று ஆசிரியர் பணியிடங்களில் 200 பேரை நியமிக்க அரசு ஒப்புக்கொண்டது. ஆங்கிலம், வரலாறு மற்றும் தமிழ் பாடங்களில், முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., படித்து முடித்த பார்வையற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால், எம்.காம்., எம்.எட்., எம்.பில்., படிப்புகளை படித்த பார்வையற்றோர் 10 ஆண்டு காலமாக, ஆசிரியர் பணியிடங்களில் இன்னும் நியமிக்கப்படவில்லை. 22 வயதிலேயே தமிழ் மற்றும் வரலாற்று பாடம் படித்தவர்களுக்கு ஆசிரியர்களாக வேலை கிடைக்கிறது. வணிகவியல் படித்தவர்கள் 34 வயது வரை வேலைக்காக காத்திருக்க வேண்டியதுள்ளது. தற்போது தமிழ் ஆசிரியர் மற்றும் வரலாற்று ஆசிரியர் பணியிடங்களுக்கு 200 ஆசிரியர்களை நிரப்ப கடந்த மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போதும், வணிகவியல் முதுகலை பட்டம் பெற்ற பார்வையற்றோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, வணிகவியல், பொருளாதாரம், உள்ளிட்ட மற்ற பாடங்களில் முதுகலை பாடம் பெற்ற பார்வையற்றோரை அரசுப் பள்ளிகளில் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரித்தார். மூவர் சார்பில், வக்கீல் கோவி ராமலிங்கம் ஆஜரானார். மறுஉத்தரவு வரும் வரை முதுநிலை ஆசிரியர் (வணிகவியல்) பணியிடங்களில் மூன்று இடங்களை காலியாக வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.