உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லூரிகளில் ஆசிரியர் ஓய்வு வயது உயர்வு

பெங்களூரு: ‘மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, அவர்கள் ஓய்வு பெறும் வயது, 70 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டில் இருந்தே அமலுக்கு வரும்’ என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். பெங்களூரில் உள்ள தேசிய மன நல மையத்தில் நடந்த 15வது பட்டமளிப்பு விழாவில்,  அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:மருத்துவக் கல்லூரிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமான வகையில் இல்லை. இதை சமாளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக மருத்துவ கவுன்சில் விதித்துள்ள விதிமுறைகளில் சிலவற்றை தளர்த்தி புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. குறிப்பாக மருத்துவத்தில் பல்வேறு துறைகளில் நிபுணர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. இதை சமாளிக்க, ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:1 என்று இருப்பதை நடப்பாண்டில் இருந்து 1:2 விகிதத்தில் மாற்றியுள்ளோம். மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை, 70 ஆக நீடித்துள்ளோம். இதை, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளில் முதுகலை பட்டப் படிப்பிற்கான இடங்கள், நான்காயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டாண்டுகளில் பத்தாயிரமாக ஆக்கப்படும். பெரிய தொழில் நிறுவனங்கள் மருத்துவக் கல்லூரிகள் துவங்க அனுமதிப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்