உள்ளூர் செய்திகள்

பெண்கள் கல்வியுடன் வெளியுலக அறிவையும் பெற வேண்டும்

பொள்ளாச்சி: பெண்கள் கல்வி அறிவுடன், வெளியுலக அறிவை பெற வேண்டும்,'' என, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா பேசினார். பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், மகளிர் மையம் சார்பில் "உலக மகளிர்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கமலவள்ளி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா பேசியதாவது: பெண்கள் கல்வியறிவு பெறும் கடமையை செய்யாததால் நிறைய பிரச்னை ஏற்படுகிறது. முழுமையான கல்வி அறிவும், வெளியுலக அறிவும் பெண்கள் பெற வேண்டும். அதற்கு கல்லூரி காலம் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் நூலக அறிவையும், பத்திரிகை படிப்பதையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தன்னை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கண்காணிக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடிந்ததும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் போராட வேண்டும். சிவில் சர்வீஸ், மற்றும் குரூப் தேர்வுக்கு சென்னையிலுள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பாடப்புத்தகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பாடங்களை நன்கு புரிந்து வைத்திருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும். பெண்கள் ஒரு பருவம் வரையிலும் பெற்றோர் பராமரிப்பில் இருக்கின்றனர்; அதன்பின், கணவன் பராமரிப்பில் வாழ்கின்றனர். மின்கட்டணம், டெலிபோன் பில், மளிகை பொருட்கள் போன்ற அனைத்து பணிகளையும் பெற்றோரும், கணவனும் செய்து கொடுப்பதால் வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வாழ்கின்றனர். இதற்கு பெண்களின் சோம்பேறித்தனம் தான் காரணம். உரிமையை கேட்கும் பெண்கள் கடமையை மறந்து விடுகின்றனர். சமுதாய வாழ்க்கை கல்வியை பெண்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு வெளியுலக அனுபவமும், கல்வி அறிவும் அவசியம். முகஅழகை கவனிக்கும் பெண்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதில்லை. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் உறுதிதன்மையும், தற்பாதுகாப்பும் கிடைக்கும். பொதுவாக பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாமல் இருக்கின்றனர். மற்றவர்களை சார்ந்து முடிவெடுக்கும் போது பலமுயற்சிகள் தோல்வியை சந்திக்கிறது. அதனால் சுயமாக திடமான முடிவு எடுக்கும் தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அழுது தனது பலவீனத்தை வெளிப்படுத்தாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் போராட வேண்டும். இவ்வாறு, ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா பேசினார். "போலீஸ் பணியில் சிரமமுண்டு'கருத்தரங்கில் மாணவிகளின் கேள்விகளுக்கு ஏ.டி.எஸ்.பி., சண்முகப் பிரியா பதிலளித்த போது கூறியதாவது: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பொறுப்பேற்றதும், ஒவ்வொரு வழக்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். லஞ்சம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் சரியான ஆதாரத்துடன் கைது செய்து வருகிறேன். வழக்குக்கு தேவையான ஆதாரங்கள், ஆவணங்கள் கிடைத்தவுடன் சுயமாக முடிவு எடுத்து வழக்குப்பதிவு செய்கிறேன். இதனால், உயர்அதிகாரிகள் பாராட்டு கிடைக்கிறது. போலீஸ் பணியில் நிறைய சிரமம் உண்டு. யாருடைய மிரட்டலுக்கு பயப்படக்கூட்டாது. பணி முடிந்து வீட்டில் இருக்கும் நேரத்தில், போலீஸ் எண்ணத்தை கழற்றி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு கிடைப்பதில்லை. ஊழல் தடுப்பு பிரிவில் 70 சதவீத வழக்குகளுக்கு மட்டுமே தீர்ப்பு கிடைக்கிறது. தீர்ப்பு வரும்வரையிலும் வழக்கை தொடர்ந்து கண்காணிக்காததே இதற்கு காரணம். இவ்வாறு, ஏ.டி.எஸ்.பி., பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்