அதிக அதிகாரம் கோரிய ஐ.ஐ.எம். திருத்தங்கள் நிராகரிப்பு
ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில், மத்திய அரசின் தலையீட்டை ஏறக்குறைய முற்றிலும் நீக்கும் வகையிலான சில திருத்தங்களை ஐ.ஐ.எம்-பெங்களூர் முன்வைத்தது. ஐ.ஐ.எம்-பெங்களூருக்கும், மனிதவளத் துறைக்கும் ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் சில முக்கிய திருத்தங்களை ஐ.ஐ.எம்-பெங்களூர் முன்வைத்தது. கடந்த ஜனவரி மாதம் முன்வைக்கப்பட்ட இந்த திருத்தங்களில், * ஐ.ஐ.எம். செயல்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை எனில், அதன் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசே எடுத்துக்கொள்ளும் உரிமையை ரத்துசெய்வதோடு, ஐ.ஐ.எம். முறைகேடுகளை ஆய்வுசெய்ய வேண்டுமெனில், அரசாங்கம் ஐ.ஐ.எம். நிர்வாக வாரியத்தின் அனுமதியைப் பெற வேண்டும். * ஐ.ஐ.எம். அதிகாரத்தை நிர்ணயிப்பதில் அரசாங்கத்தின் பங்கை ரத்துசெய்ய வேண்டும் ஆகிய திருத்தங்கள் முக்கியமானவை. ஆனால் இத்தகைய திருத்த கோரிக்கைகளை மனிதவள அமைச்சகம் நிராகரித்து விட்டது. ஐ.ஐ.எம். ஒரு பொதுத்துறை கல்வி நிறுவனம் என்பதால் இவற்றை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் தலையீடு இல்லாமல், டைரக்டரை தேர்வு செய்யும் அதிகாரம் ஐ.ஐ.எம் -க்கு வழங்கப்பட வேண்டும் என்ற செயல்திட்டத்தையும் கிடப்பில் போட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஐ.ஐ.எம்-பெங்களூரின் இந்த திருத்தங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டதால், இதுபோன்ற அதிக அதிகாரங்களை எதிர்பார்க்கும் பிற ஐ.ஐ.எம் -கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.