உள்ளூர் செய்திகள்

‘பொறியியல் மாணவர்கள் கல்வித்துறையிலும் ஆர்வம் காட்ட வேண்டும்’

பொள்ளாச்சி: ‘சுயநிதி பொறியியல் கல்லூரிகளை மேம்படுத்த, அரசு மூலதன உதவி செய்ய முன்வர வேண்டும்’ என, பொள்ளாச்சி மகாலிங்கம் வேண்டுக்கோள் விடுத்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. விழாவில், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி வரவேற்றார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் தலைமை வகித்து பேசியதாவது: கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களை, மூத்த மாணவர்கள் அன்புடன் வரவேற்க வேண்டும். ‘ராகிங்’ போன்ற கலாச்சாரங்கள் கல்லூரிகளுக்குள் நுழையக்கூடாது. கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், பல எதிர்பார்ப்புகளுடன் வருகின்றனர். மாணவர்கள் எதிர்பார்ப்புடன் மட்டும் இல்லாமல், திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். தற்போது கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், அனைவருக்கும் கல்வி திட்டத்தை புகுத்த அரசும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் நிறைவேற மக்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., முதல் கல்வியை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில், வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த  அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும். பொறியில் படிப்புகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் வேகமாக வளர்ந்து வருகிறது. இக்கல்லூரிகளுக்கு அரசு அனுமதி தருவதோடு நிறுத்தி கொள்கிறது; அதை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மாணவர்களும், கல்லூரிகளும் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க, இக்கல்லூரிகளுக்கும் அரசு மூலதன உதவி செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் அரசே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வசதிகளை மேம்படுத்தினால், மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதோடு, கல்வித்தரமும் மேம்படும். கல்லூரியை சிறந்த கல்வி நிறுவனமாக மாற்ற பெற்றோர்களும், அரசும் உதவ வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் போதே மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொண்டால், சிறந்த வேலைவாய்ப்பை பெற முடியும்; எதிர்காலமும் சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு திறமைகளை வளர்க்கும் விதமாக ஆசிரியர்களும் அமைய வேண்டும். இதற்கு, கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறியியல் படிப்பை படிக்கும் மாணவர்கள் தொழில்சார்ந்த துறைகளில் பணிபுரிய ஆர்வம் காட்டாமல், கல்வித்துறையிலும் ஆர்வம் காட்ட வேண்டும். கல்வித்துறையிலும், அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, பொள்ளாச்சி மகாலிங்கம் பேசினார். கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம், தாளாளர் சங்கர் வாணவராயர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்