உள்ளூர் செய்திகள்

பிஎச்.டி., ஆய்வில் ஆர்வம் இல்லாத பொருளாதார மாணவர்கள்!

இது பிரபல பொருளாதார கல்வி நிலையமான சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் உள்ள நிலை மட்டுமல்ல, வேறு சில பிரபல கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் முதுநிலை பொருளாதாரப் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, திறமைவாய்ந்த இந்த மாணவர்கள் யாரும் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பில் சேர முன்வருவதில்லை. இந்நிலையில், தரம் வாய்ந்த மாணவர்களை பொருளாதார ஆய்வுப் படிப்புகளில் சேர்ப்பது சிரமமாக உள்ளது என்கிறார் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் இயக்குநர் கே. ஸ்ரீவத்ஸா. ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய இந்திராகாந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மெண்ட் ரிசர்ச் கல்வி நிறுவனம் கூட பிஎச்.டி., படிப்புக்கு திறமையான மாணவர்களை ஈர்க்க முடியாமல் இதுபோன்ற நிலையைச் சந்தித்தது. இந்தியாவில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களிலும் தரமான மாணவர்களை பிஎச்.டி., படிப்புக்கு ஈர்க்க முடியாத நிலை தொடர்ந்து நிலவுகிறது. தற்போது இந்த நிலை பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனங்களுக்கும் பரவத் தொடங்கி விட்டது. தரமான ஆசிரியர்கள், குறைந்த கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு ஆகியவை காரணமாக தரமான மாணவர்கள் பிஎச்.டி., படிப்பில் அதிக ஆர்வம்காட்டுவதில்லை என்கிறார்கள். பிஎச்.டி., படிப்பதில் ஆர்வம்காட்டும் ஒரு சில மாணவர்கள் கூட, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு தாரளமாக கல்வி உதவித் தொகை கொடுக்க முன்வருகின்றன என்பது இந்திய மாணவர்களை ஈர்க்க முக்கியக் காரணம். இந்தியாவில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. சில மேலாண்மை கல்வி நிறுவனங்கள் மட்டுமே மாதம் ரூ.25 ஆயிரம் அளவுக்குக் கல்வி உதவித் தொகையை வழங்குகின்றன. வெலிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்புக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அத்துடன் மாதமம் 800 டாலரிலிருந்து 1,500 டாலர் வரை உதவித் தொகை கிடைக்கிறது. மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிஸ், இந்திராகாந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மெண்ட் ரிசர்ச் போன்ற கல்வி நிறுவனங்களில் முதநிலை பட்டப் படிப்பு படித்த  மாணவர்களுக்கு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சம் வரை மாத ஊதியத்தில் வேலை கிடைக்கிறது. பிஎச்.டி., படித்து முடித்த மாணவர்களுக்கு இதைவிட ரூ.50 ஆயிரம் வேண்டுமானால் அதிக ஊதியம் கிடைக்கலாம். பிஎச்.டி., படிக்கச் செலவிடும் நான்கு ஆண்டு காலத்தில் எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கலாம் என்றெல்லாம் மாணவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான், பிஎச்.டி., படிப்பில் சேருவதில் தயக்கம் காட்டுகின்றனர். தொழில் நிறுவனங்களில் ஒரிரு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்தில் பிஎச்.டி., படிப்பில் சேர ஆண்டுதோறும் ஐந்து மாணவர்கள் வருகிறார்கள். ஒரு சில மாணவர்கள் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிலையத்திற்கு படிக்க வருவதே, வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கச் செல்வதற்கானத்தான். பிஎச்.டி., படிக்கச் சேரும் மாணவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் கல்வி உதவித் தொகையை உயர்த்துவதுடன், அப்படிப்பை முடித்த உடன் கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டியது அவசியம். அதன்பிறகுதான், திறமையான நன்கு படிக்கும் மாணவர்கள் பிஎச்.டி. ஆய்வு படிப்புகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்போதுதான், நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், வர்த்தத் துறை பொருளாதார நிபுணர் ஜகதீஷ் பகவதி போல சர்வதேச புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களை உருவாக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்