உள்ளூர் செய்திகள்

தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த அபினவ் பிந்த்ராவை பாராட்டி பேரணி

சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ‘ஏர் ரைபிள்’ பிரிவில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல்முறை. இதைக் கொண்டாடும் வகையில், கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு கோவை நகரில் ஆகஸ்ட் 12ம் தேதி பேரணி நடத்தினர். காந்திபுரம் விரைவுபோக்குவரத்துக்கழக பஸ் ஸ்டாண்ட் அருகே பேரணியை, கோவை மாநகர மேயர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார். மாநகராட்சி கல்விக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், கவுன்சிலர் ஷோபனா, கல்லூரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேரணி, வி.கே.கே., மேனன் ரோடு, டாக்டர் பாலசுந்தரம் ரோடு வழியாக வந்து இறுதியில் கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் முடிந்தது. இப்பேரணி பற்றி ஏ.ஜே.கே., கல்லூரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன் கூறுகையில், “ ஒலிம்பிக் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை, கல்லூரி மாணவர்களும் கொண்டாட பேரணி நடத்தியுள்ளோம். இந்த பேரணி, மாணவர்கள் மத்தியில் விளையாட்டை ஊக்கப்படுத்த உதவும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்