ஆங்கில வழி பாடப் புத்தக விநியோகிப்பில் தாமதம்?
சிவகங்கை: ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் வினியோகிப்பதில் குழப்பம் நீடிப்பதால், பள்ளி துவங்கிய பிறகாவது மாணவர் கையில் புத்தகங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 1 முதல் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் 10 ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக 6.91 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தமிழ்வழி கல்வியில் 92 லட்சத்து 30 ஆயிரம் இலவச புத்தகங்கள், அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இழுபறி: ஆனால், தனியார் (ஆங்கில வழி) பள்ளிகளுக்கான 37 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் சில்லரை விற்பனைக்கான 2.90 லட்சம் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி இழுபறியில் உள்ளது. கடந்த கல்வி ஆண்டில், பாடநூல் கழகத்திலிருந்து நேரடியாக இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் தாமதமாக வாய்ப்புள்ளது. ஆங்கில வழி கல்வி புத்தகங்களும், இதுவரை கிடங்குகளுக்கு வரவில்லை. சிக்கல்: மாணவர்களுக்கு தாமதமாக புத்தகங்களை வழங்கினால், புதிய பாட திட்டத்தை புரிய வைப்பது கடினம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பாடநூல் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "தனியார் பள்ளிகளுக்கு யார் மூலம் புத்தகம் வழங்குவது என இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுவாக, ஆங்கில வழி புத்தகங்கள் குறைவாக இருக்கும். தமிழ் வழி புத்தகங்களை வழங்கிய பின் அவற்றை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது&'&' என்றார்.