கவுன்சிலிங்கில் தேர்வான மாணவர்களிடமும் கல்லூரிகள் ‘கறார் வசூல்’
கோவை: சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான பி.இ., பி.டெக்., படிப்புகளை கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்த மாணவ, மாணவிகள் ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.32 ஆயிரத்து 500 செலுத்தினால் போதும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சில சுயநிதி கல்லூரிகள், கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தச் சொல்லி, மாணவர்களை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், தரமான கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளை மாணவ, மாணவிகள் தேர்வு செய்கின்றனர். அரசு நடத்தும் இன்ஜி., பொது கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவி, முதல் ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.32,500 செலுத்தினால் போதும். தேர்வு செய்த படிப்புக்கு தேசிய தர நிர்ணயத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு இருந்தால், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பெரும்பான்மையான கல்லூரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்துள்ளதை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. கோவையில் உள்ள தரமான சில இன்ஜி., கல்லூரிகள் கூட ஆய்வக வசதி, விடுதி வசதி உள்ளிட்டவைகளை காரணம் கட்டி, பணத்தை கறந்து விடுகின்றன. இதனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வெறும் கண்துடைப்பு தானோ என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது. சில கல்லூரிகள், முதலாண்டு மாணவர்களிடம் ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற இன்ஜி., கல்லூரிகள் மீது புகார் தர பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரி நிர்வாகம் மீது புகார் கொடுத்தால், தங்களது பிள்ளைகளில் கல்வி பாதிக்குமோ என்ற பயமே காரணம். இதுபோன்ற கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், பல்கலையும், ‘எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறுகின்றன. கண்டிப்பாக பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக புகார் தர மாட்டார்கள் என்பதை அறிந்தே உயர்கல்வித் துறை எழுத்துப்பூர்வமான புகார் கேட்கிறது. கடந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் சுயநிதி இன்ஜி., கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், முதலாண்டு படிப்பை முடித்து இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தும் போதும் சில இன்ஜி., கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் முதல் ஆண்டுக்கு மட்டும் தானா? என்ற கேள்வி பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. இதுபற்றி கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “சில இன்ஜி., கல்லூரிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வருகிறது. ஆனால், எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பற்றி, பெற்றோர்கள் என்னை நேரில் சந்தித்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட இன்ஜி., கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.