அனைத்து கல்லுாரி படிப்புகளுக்கும் இந்த ஆண்டே 10 சதவீத இட ஒதுக்கீடு முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் அனைத்து கல்லுாரி பாடங்களுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே நடைமுறைப்படுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த மாணவர் நாள் விழாவில் அவர், பேசியதாவது:புதுச்சேரியில் கல்விக்காக ஆண்டிற்கு, 1,350 கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்கிறது. அதில், பள்ளி கல்விக்கு மட்டும் 950 கோடி ஒதுக்கி, ஆரம்ப கல்வி கொடுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு திறனை மேம்படுத்த, மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.அரசு பள்ளி மாணவர்களுக்கு நல்ல உயர்க்கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 10 சதவீதம் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் மாணவர்கள் படித்து வருகின்றனர்.தற்போது, அனைத்து கல்லுாரி பாடங்களுக்கும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான கோப்புகள் தயாராக உள்ளது. பள்ளி கல்வி மட்டுமல்லாது, உயர்கல்வி கொடுப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.பிரதமர் மோடியின் எண்ணத்தின்படி,குழந்தைகளுக்கு விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும், கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வத்தை வளர்க்கவும் அரசு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து வருகிறது.அரசு பள்ளி மாணவர்களிடம் பேச்சு திறனை மேம்படுத்தவும், புதுச்சேரிக்கு தேவையான கல்லுாரிகளை கொண்டு வருவதற்கான பணிகளை அரசு செய்து வருகிறது. மாணவர்கள் நல்ல நுால்களை படித்து, வாசிப்பு திறனை வளர்த்து கொள்ள வேண்டும். 2022-23, 2023-24ம் ஆண்டு மாணவர்களுக்கான லேப் டாப் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றார்.