உள்ளூர் செய்திகள்

மாரத்தான் போட்டி: முதலிடம் பெற்ற இருவருக்கு ரூ.10 லட்சம் பரிசு!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) காலையில் போர்வீரர்கள் நினைவுச் சின்னம் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற சந்தோஷ்குமாருக்கும் பெண்களில் முதலிடம் பெற்ற பிரீஜா ஸ்ரீதரனுக்கும் முதல் பரிசாக தலா 10 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் கில், மாநில அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, மைதீன்கான் மற்றும் கனிமொழி எம்.பி., ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இரண்டாம் இடத்தை சுரேந்திர சிங், மூன்றாவது இடத்தை சந்தீப்குமார் ஆகியோர் பெற்றனர். பெண்களில் இரண்டாம் இடத்தை ப்ரீத்தி ராவ், மூன்றாம் இடத்தை கவிதாராவ் ஆகியோர் வென்றனர். இரண்டாம் இடத்தைப் பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சமும் மூன்றாவது இடத்தைப் பெற்றவர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழக வீரர்களில் முதல் இடத்தை நாகேந்திர ராவ், இரண்டாவது இடத்தை லோக்ராஜ், மூன்றாவது இடத்தை பத்மநாபன் ஆகியோர் கைப்பற்றினர். பெண்களில் முதல் இடத்தை சுதா, இரண்டாம் இடத்தை சாந்தி, மூன்றாம் இடத்தை மகேஸ்வரி வென்றனர். ஊனமுற்றோர் கர நாற்காலி ஓட்டப் பந்தயத்தில் முதல் இடத்தை விஜயசசாரதி, இரண்டாம் இடத்தை மதுகுமார், மூன்றாவது இடத்தை சைசயது அபுபாய் ஆகியோர் பிடித்தனர். பெண்களில் முதல் இடத்தை னுராதா, இரண்டாம் இடத்தை ரசிகலா, மூன்றாவது இடத்தை தீபிகா ஆகியோர் வென்றனர். சென்னை மாரத்தான் 21 கி.மீ., தி கிரேட் சென்னை ஓட்டம் 7 கி.மீ., ஜூனியர்ஸ் ஓட்டம் 7 கி.மீ., மாஸ்டர்ஸ் ஓட்டம் 3 கி.மீ., வீல் சேர் ஓட்டம் 500 மீட்டர் என ஐந்து பிரிவாக நடந்தது. மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சசர் கில் பேசியதாவது: ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்கா என்ற சிறிய நாடு தான் சாதனை படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் ஒரு சிறிய பகுதியான ஜமைக்காவில் மக்கள் தொகை மிகவும் குறைவு. எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாத அந்த நாடு உலக சாதனை படைத்தது பாராட்டுக்குரியது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். சென்னை மாரத்தான் போட்டியில் எதிர்பார்த்தவர்களை விட அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக விளையாட்டு மேம்பாட்டிற்கு இது ஒரு நல்ல அறிகுறியாக விளங்குகிறது என்றார் மத்திய அமைச்சர் கில். தமிழ் மையம் ஜெகத் கஸ்பர்,  அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, கவிஞர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்