உறைவிட பள்ளியில் உணவருந்திய மாணவி பலி; 100 பேர் பாதிப்பு
பரிபாடா: ஒடிஷாவில், உறைவிட பள்ளியில் உணவருந்திய 100க்கும் மேற்பட்ட சிறுமியர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்; இதில் ஒரு சிறுமி உயிரிழந்தார்.ஒடிஷா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ககாபந்தா ஆஸ்ரம் உறைவிட பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படிக்கின்றனர். இரு நாட்களுக்கு முன் புளித்த பழைய சோற்றுடன் உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் மாங்காய் சட்னி மாணவியருக்கு வழங்கப்பட்டது.இதை சாப்பிட்டதும் மாணவியருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவியர் அங்குள்ள சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்களில் 67 பேர் பரிபாடாவில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5ம் வகுப்பு மாணவி ரூபாலி பெஸ்ரா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதையடுத்து சிறுமி இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரஸ்கோவிந்த்பூர் - ஜலேஸ்வர் சாலையில் சிறுமியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டும் முழக்கமிட்டனர்.இது பற்றி மயூர்பஞ்ச் கலெக்டர் ஹேமா கந்தா சாய் கூறுகையில், “உணவு பட்டியலில் இல்லாத உணவு வழங்கப்பட்டது ஏன்? என தலைமை ஆசிரியர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் ஜெயந்த் குமார் பானிகிரஹி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போலீசார் தவிர கல்விதுறை சார்பில் தனியாக விசாரணை நடத்தப்படும் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது,” என்றார்.