உள்ளூர் செய்திகள்

புதிய வேலை உறுதி சட்டத்தால் மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடி ஆதாயம்; எஸ்.பி.ஐ., கணிப்பு

புதுடில்லி: 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' எனப்படும் வளர்ந்த பாரதம் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத சட்டத்தால், மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படாது. இது, மாநில அரசுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும். ஒட்டுமொத்தமாக மாநில அரசுகள், 17,000 கோடி ரூபாய் லாபம் பெறும்' என, எஸ்.பி.ஐ., எனப்படும், 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' தெரிவித்துள்ளது.நாட்டில், 20 ஆண்டுகளாக அமலில் இருந்த மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில், சில மாறுதல்களுடன் புதிய மசோதாவை, நடந்து முடிந்த பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, அறிமுகப்படுத்தியது.அதன்படி, 100 நாட்கள் வேலை என்பது 125 ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு 100 சதவீத நிதி வழங்கிய நிலையில், அது, 60:40 என்ற விகிதத்தில் மாற்றப்பட்டது. அதன்படி, மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசுகள், 40 சதவீதமும் நிதி வழங்க வேண்டும்.எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 21ல், இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.புதிய வேலைவாய்ப்பு சட்டத்துக்கு பா.ஜ., அல்லாத மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மாநில அரசுகளுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து, வரும் ஜன., 5 முதல் நாடு முழுதும் போராட்டம் நடத்தப் போவதாகவும் காங்., அறிவித்துள்ளது.அதிக லாபம்இந்நிலையில், விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம் குறித்து, நாட்டின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கை: விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு லாபமே கிடைக்கும். தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், இத்திட்டத்தின் பலன்களை இன்னும் அதிகமாக மாநில அரசுகள் பெற முடியும். புதிய சட்டத்தின் புறநிலை மதிப்பீடு, மாநிலங்களுக்கான ஒட்டுமொத்த நிதி வினியோகம் மேம்பட்டு உள்ளதை காட்டுகிறது.கடந்த 2021ஐ தவிர்த்து, 2019 - 25 வரையிலான ஏழு ஆண்டுகளில் வழங்கப்பட்ட சராசரி நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும் போது, மத்திய அரசின் பங்கை மட்டும் அடிப்படையாக வைத்து கணக்கிட்டால், மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக, 17,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த மதிப்பீடு, 'சமநிலை, திறன்' ஆகிய இரண்டு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஏழு அளவுகோல்களின் கீழ் கணக்கிடப்பட்டு உள்ளது.இரு மாநிலங்களு க்கு மட்டுமே மிகக்குறைந்த இழப்பு ஏற்படுகிறது. அதே சமயம், பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, 2024 நிதியாண்டு ஒதுக்கீட்டை தவிர்த்தால் இழப்பு மிகவும் குறைவு தான். உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிக லாபம் பெறும்.நிதி பகிர்வுபுறநிலை அளவுகோல்களை பின்பற்றுவது வளர்ந்த மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு இடையிலான நிதி பகிர்வை வலுப்படுத்துவதோடு, சமநிலை மற்றும் திறனை பாதுகாக்கும். மேலும், திருத்தப்பட்ட நிதி பகிர்வு முறையின் கீழ், மாநிலங்கள் தங்களின் 40 சதவீத பங்களிப்பை சிறப்பாக பயன்படுத்தினால், இன்னும் அதிக பலன்களை பெற வாய்ப்புள்ளது.திருத்தப்பட்ட மத்திய - மாநில அரசின் நிதி பகிர்வு, மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் அல்லது கூடுதல் கடன் வாங்க துாண்டும் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை. மாநில நிதி குறித்த தவறான புரிதலால் இவை எழுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்