உள்ளூர் செய்திகள்

குள்ள மனிதருக்கான போட்டியில் தமிழக வாலிபருக்கு 2 வெள்ளி பதக்கம்

தர்மபுரி: அமெரிக்காவில் நடந்த உலக குள்ள மனிதருக்கான போட்டியில், பங்கேற்ற தமிழக வாலிபர், 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் முனிராஜ், 60. இவரது மகன்கள் பிரகாஷ், 23, மஞ்சுநாதா, 23. மகள்கள் தனலட்சுமி, 32, நிர்மலா, 29. இதில், பிரகாஷ், தனலட்சுமி, நிர்மலா ஆகியோர் குள்ளமாக உள்ளனர். பிரகாஷ் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படித்துள்ளார். இவர், 132 செ.மீ., உயரம் உடையவர். காதும் கேட்காது. தனலட்சுமி, கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த மாரத்தள்ளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தொழில் நுட்ப ஊழியராக பணிபுரிகிறார். இவரது கணவர் கங்காதரன், 42. இவர் பெங்களூரு அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிகிறார். தனலட்சுமி, தன் தந்தை மற்றும் தம்பி, தங்கைகளுடன் மாரத்தள்ளியில் குடியிருந்து வருகிறார். பிரகாஷுக்கு கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. உயரம் குறைவு காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், மற்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார். மாற்று திறனாளியான பிரகாஷ் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதனால், குண்டு, வட்டு எறிதல் விளையாட்டுகளில் தொடர்ந்து பயிற்சி பெற்று வந்தார். கடந்த, 2009ம் ஆண்டு வட அயர்லாந்தில் நடந்த சர்வதேச வலு தூக்கும் போட்டியில் பிரகாஷ் பங்கேற்று, வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் பங்கேற்ற பிரகாஷுக்கு கர்நாடகா அரசு, 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கியது. சமீபத்தில், அமெரிக்கா, ஈஸ்ட் லேண்சிங் நகரில் நடந்த, உலக குள்ள மனிதருக்கான போட்டி ஆக., 3 முதல், 10 வரை, நடந்தது. இப்போட்டியில், 20 நாடுகளில் இருந்து உயரம் குறைந்தவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து, 18 வீரர்கள் பங்கேற்றனர். இதில், பிரகாஷ், வட்டு மற்றும் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில், இந்தியா ஆறாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து பிரகாஷ் கூறியதாவது: சிறு வயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்தது. குடும்ப வறுமை காரணமாக கெலமங்கலம் அரசு பள்ளியில் தெலுங்கு வழியில், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன். தொடர்ந்து படிக்காத நிலையில் குண்டு மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் கவனம் செலுத்தினேன். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்க, எனக்கு கர்நாடகா மாநில அரசு, ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியது. என் அக்கா, ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி, என்னை போட்டியில் பங்கேற்க அனுப்பி வைத்தார். வெற்றி பெற்ற போதும், எனக்காக என் அக்கா குடும்பம் கடனில் இருப்பதால், வெற்றியை கொண்டாட முடியவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்