மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகள் செப்., 23ல் துவக்கம்
சென்னை: மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வுகள், செப்டம்பர் 23ம் தேதியில் இருந்தும், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் 24ம் தேதியில் இருந்தும் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை எழுத, ஆக. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட அனைத்து போர்டு தனித்தேர்வர்களுக்கும், தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள், தேர்வுக் கட்டணமாக 125 ரூபாய் செலுத்த வேண்டும். எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அக்டோபர் 1ம் தேதியன்று 14 வயது ஆறு மாதங்களை பூர்த்தி செய்தவர்களும், தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மெட்ரிக் மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 100 ரூபாய் வீதமும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் வீதமும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இத்துடன், இதர கட்டணங்களாக 35 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். சென்னை மாணவர்கள், ‘அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6’ என்ற முகவரிக்கு டி.டி.,யாக எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பிற மாவட்ட மாணவர்கள், அரசு கருவூலகங்களில் செலான் மூலமும் கட்டணத்தை செலுத்தி, அதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பள்ளி மூலம் முதலில் பெற்ற மதிப்பெண் நகலையும், அதன்பின் தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் பட்டியல் நகலையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் ஹால்டிக்கெட்டில் ஒட்டப்படும் புகைப்படத்தில், படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும். மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பிரிவுகளில் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், 2001 மார்ச் மாதத்திற்கு முன் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் இருந்தால், அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வையும் கட்டாயம் செய்ய வேண்டும். அனைத்து தேர்வுகளும், அக்டோபர் 6ம் தேதி முடிகின்றன. இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை விவரம்:எஸ்.எஸ்.எல்.சி:24.9.09 - மொழி முதற்தாள்25.9.09 - மொழி இரண்டாம் தாள்29.9.09 - ஆங்கிலம் முதற்தாள்30.9.09 - ஆங்கிலம் இரண்டாம் தாள்1.10.09 - கணிதம்5.10.09 - அறிவியல்6.10.09 - சமூக அறிவியல் மெட்ரிக்:23.9.09 - மொழி முதற்தாள்24.9.09 - மொழி இரண்டாம் தாள்25.9.09 - ஆங்கிலம் முதற்தாள்26.9.09 - ஆங்கிலம் இரண்டாம் தாள்29.9.09 - கணிதம் முதற்தாள்30.9.09 - கணிதம் இரண்டாம் தாள்1.10.09 - அறிவியல் முதற்தாள்3.10.09 - அறிவியல் இரண்டாம் தாள்5.10.09 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்6.10.09 - புவியியல் மற்றும் பொருளியல் ஆங்கிலோ இந்தியன் மாணவர்களுக்கு, 24ம் தேதி தேர்வுகள் கிடையாது. அக்டோபர் 6ம் தேதி, ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு புவியியல் தேர்வு மட்டும் நடைபெறும். மற்றபடி, மெட்ரிக் தேர்வு அட்டவணைப் படியே இவர்களுக்கும் தேர்வு நடக்கிறது.