வேளாண் பல்கலை கிராம தங்கல் திட்டம் :276 மாணவர்கள் களப்பயணம்
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின், கிராமத்தங்கல் திட்டத்தில், 276 மாணவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.வேளாண் பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு கிராமத்தங்கல் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் மாணவர்கள் 8 அல்லது 10 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.அக்கிராமங்களில், மாணவர்கள் 65 நாட்கள் தங்கி விவாயிகளின் பிரச்னைகளை அறிந்துகொள்வதுடன், பல்கலையின் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.இதுகுறித்து, உதவி பேராசிரியர் கவிதா கூறுகையில், கிராமத்தங்கல் களப்பயணம் மாணவர்களின் செயல்திறன்களை மேம்படுத்தும் வகையில் அமையும்.நோய் தாக்கம் குறித்த ஆராய்ச்சி, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி, உயிர் உரங்கள் பயன்பாடு, புதிய பயிர் ரகங்களை பயிரிடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். சுல்தான்பேட்டை பகுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நேற்று விவசாயிகளுக்கு, புதிய ரகங்களை பயிரிடுதல் மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்றார்.விழிப்புணர்வு நிகழ்வில், தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு தாவர மரக்கன்றுகள், உயிர் உரங்களை வழங்கினர்.