உள்ளூர் செய்திகள்

மனிதக் கரு மூளையின் விரிவான 3டி படங்கள்: சென்னை ஐஐடி வெளியிட்டது

சென்னை: மனிதக் கரு மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வெளியிட்ட உலகின் முதலாவது ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெருமையை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.உலகிலேயே முதன்முறையாக சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தால் உருவாக்கப்பட்ட அதிநவீன மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 5,132 மூளைப் பிரிவுகள் டிஜிட்டல் முறையில் பெறப்பட்டுள்ளன. இந்தப் பணியால் நரம்பியல் துறை மேம்படுத்தப்படுவதுடன், மூளையைப் பாதிக்கும் உடல்நிலைக்கான சிகிச்சையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த மெடிஸ்கேன் சிஸ்டம்ஸ், சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவையும் இணைந்து இந்த ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டது.இது குறித்து ஜர்னல் ஆப் கம்பேரேட்டிவ் நியூராலஜி இதழின் ஆசிரியர் குழுத் தலைவரான சுசானா ஹெர்குலானோ-ஹவுசல் கூறுகையில், மனிதக்கரு மூளை பற்றிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்புதான் தரணி. ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் இந்த ஆராய்ச்சிக்கு செலவிடப்பட்டுள்ளது. எனவே, ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட் உடன் சென்னை ஐஐடி இணைந்து செயல்படும், என்றார்.சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தின் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் கூறுகையில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆய்வு வழிவகுக்கும், நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் கருவின் மருத்துவத்தில் முன்னேற்றங்களை அளவிடவும் ஏதுவாக இருக்கும், என்றார் உலகெங்கும் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், இதன் தரவுத் தொகுப்பான தரணி யை (DHARANI) ஓபன் சோர்ஸ் முறையில் பின்வரும் இணைப்பில் காணலாம் (https://brainportal.humanbrain.in/publicview/index.html).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்