பள்ளி மாணவ, மாணவியருக்கு காஞ்சியில் ‛வாசிப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், எழுதுக இயக்கம் சார்பில், சுதந்திர தின விழாவையொட்டி, ‛புத்தக வாசிப்பு - தினசரி வாழ்வின் ஓர் அங்கம்' என்ற தலைப்பில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாசிப்பு முகாம் நேற்று நடந்தது.முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு வழிகாட்டுதலின்படி, ‛எழுதுக' இயக்கம், மாணவ, மாணவியரிடையே புத்தக வாசிப்பு, புத்தகம் எழுத பயிற்சி, எழுத்தாளர்களாக உருவாக்குதல் என, மாணவ, மாணவியரின் தமிழ் மொழியில் நன்றாகப் பேசவும், பிழையின்றி எழுதவும் ஊக்கப்படுத்தி வருவதோடு, எழுத்தாளர்களாக உருவாக்கி, அவர்கள் எழுதிய நுால்களை வெளியிட்டும் வருகிறது. தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவியரிடையே புத்தக வாசிப்பை ஊக்குவித்து, புத்தகம் எழுதப் பயிற்சி வழங்கப்பட்டு, இது வரை 510 மாணவ, மாணவியர் இளம் படைப்பாளிகளாக மலர்ந்துள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி, ‛புத்தக வாசிப்பு - தினசரி வாழ்வின் ஓர் அங்கம்' என்ற தலைப்பில் வாசிப்பு முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.எழுதுக இயக்கத்தின் பொறுப்பாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். மருத்துவர் எம்.எச்., பட்டீல் முன்னிலை வகித்தார். கல்வியாளரும் எழுத்தாளருமான எக்பர்ட் சச்சிதானந்தம் தேசியக்கொடி ஏற்றி கருத்துரை வழங்கினார். இதில், பங்கேற்ற மாணவ, மாணவியர் தாங்களே விரும்பி தேர்ந்தெடுத்த புத்தகத்தை 20 நிமிடங்கள் வாசித்தனர். தொடர்ந்து, வாசிப்பு அனுபவம் குறித்தும், இன்றைய முகாமில் கிடைத்த அனுபவம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. நுாலகர் பூபதி நன்றி கூறினார்.