உள்ளூர் செய்திகள்

கடலுார் மாணவன் பலி ஏன்? விசாரணையில் திடுக் தகவல்

சென்னை : கடலுார் மாவட்டத்தில், பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தில், பள்ளியில் கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது, பள்ளிக்கல்வித் துறை விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.கடலுார் மாவட்டம் ராமநத்தம் அடுத்த, வி.சித்துார் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பாலமுருகன், 14. கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி, இயற்கை உபாதைக்காக பள்ளியில் இருந்து வெளியே சென்ற பாலமுருகன், பள்ளிக்கு திரும்பவில்லை.தேடியபோது அப்பகுதியில் இருந்த கிணற்றில், அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 26ம் தேதி, விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரித்தார். அவரது அறிக்கையில், 'பள்ளி வளாகத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்களுக்கான கழிப்பறை பராமரிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு கழிப்பறை இருந்தும், அது சரியாக பராமரிக்கப்படவில்லை. அதை பயன்படுத்த முடியாததால், மாணவன் பள்ளி வளாகத்திற்கு, வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் அளித்த அறிக்கை அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது விசாரணை அறிக்கையை, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் நேற்று சமர்பித்தார்.பள்ளி கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், மாணவன் பாலமுருகன், இயற்கை உபாதைக்கு வெளியே சென்றது, மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணையில் உறுதியாகி இருப்பது, பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்