உள்ளூர் செய்திகள்

மாவட்டத்தில் அரசு பள்ளிகள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6.71 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்தணி: மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பராமரிப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக, 6.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், 984 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 257 நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம் 1,241 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் பராமரிப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள், அந்தந்த ஒன்றிய நிர்வாகம் மூலம் செய்து தரப்படுகின்றன.பெரும்பாலான தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. மேலும், பள்ளி கட்டடங்களும் சேதமடைந்து உள்ளன.ஊரக வளர்ச்சி துறை சார்பில், மாவட்டம் முழுதும் பழுது பார்க்க வேண்டிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.இதில், 270 தொடக்கப் பள்ளிகள், 119 நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம் 389 பள்ளிகளில், பராமரிப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த போதிய நிதியுதவி வழங்குமாறு, வருவாய் கோட்ட ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குநர்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.இதையடுத்து, பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கு, பள்ளி உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம், 2025 - 26ம் ஆண்டின் கீழ், 6.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறையின் உயரதிகாரி கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள் மூலம், 389 அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், கழிப்பறைகள் பராமரிப்பு, வகுப்பறை கட்டடம் சேதம் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக, 6.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகள் தற்போது துவங்கியுள்ளன. மூன்று மாதத்திற்குள் முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.அதேபோல், ஒன்றியத்திற்கு, ஒரு புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு, 5.03 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் ஆறு மாதத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்