உங்களால் முடியும் நிகழ்ச்சியால் மகிழ்ந்த மாணாக்கர்கள்
சென்னை: "தினமலர்" நாளிதழ் நடத்தும் ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்தும், "உங்களால் முடியும்" நிகழ்ச்சி தங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்ததாக மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறினர்.வைஷாலி, பெரியார் நகர், சென்னை: "தினமலர்" நாளிதழ் நடத்திய ஜெயித்துக் காட்டுவோம், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். அதன்மூலம், சிறந்த மதிப்பெண் பெற்று தற்போது இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்து படிக்கவுள்ளேன். கவுன்சிலிங்கை சிறப்பாக எதிர்கொள்ள, "உங்களால் முடியும்" நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் புதிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிக்கும் எண்ணமும் மனதில் எழுந்துள்ளது. யோகலட்சுமி, சென்னை: கவுன்சிலிங் குறித்து பல சந்தேகங்கள் இருந்த நிலையில், ஆரம்ப நிலையில் இருந்து, இறுதிவரை, கவுன்சிலிங்கை சிறப்பாக சந்திக்கும் வகையில் இந்நிகழ்ச்சி இருந்தது. நான் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்து படிக்கவுள்ளேன். பத்மா(தாய்) மந்தைவெளி, சென்னை: என் மகளுக்காக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தேன். கல்வி ஆலோசகர்கள் கூறிய அறிவுரைகளை குறிப்பெடுத்து உள்ளேன். இதன் பின்னரே, எனது மகளிடம் கலந்து ஆலோசித்து சிறந்த துறையை எடுக்கவுள்ளோம். ஜெயபிரதா, ஜெயசுருதி (இரட்டை சகோதரிகள்), சென்னை: நாங்கள் இருவரும், பிளஸ் 2 தேர்வில் இரண்டு மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளோம். எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் சேர்ந்து படிக்கவுள்ளோம். இந்நிகழ்ச்சி எங்களை கவுன்சிலிங்கிற்கு சிறப்பாக தயார்படுத்தியுள்ளது.