கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?
காலையில், ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிசெயலாளர் சின்னதுரை அப்துல்லா குத்துவிளக்கேற்றினார். மாலையில், மதுரை பசுமலை மன்னர் கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிகளில், கவுன்சிலிங் விதிகள் குறித்து தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் (சென்னை அண்ணா பல்கலை) ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 488 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன. விண்ணப்பித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த கல்லூரியில், எந்த பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து முடிவு செய்ய வேண்டும். கவுன்சிலிங் அழைப்பு கடிதம் வராவிட்டாலும், இணையதளத்தில் பார்த்து தேதியை தெரிந்துகொள்ளலாம். பல்கலை வளாகத்தில் விண்ணப்ப பதிவெண்ணை தெரிவித்தால், தற்காலிக அழைப்புக் கடிதம் தரப்படும். அத்துடன் 5000 ரூபாயை வங்கியில் செலுத்தி, கவுன்சிலிங் சலானை பெற வேண்டும். இந்த ஆவணங்களுடன் கவுன்சிலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். பெரிய திரையில் மணிக்கொரு முறை, கல்லூரிகளிலுள்ள காலியிடங்கள் வெளியிடப்படும். அதிலிருந்து விருப்பப்பட்ட மூன்று கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்யலாம். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி நேரத்திற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன் அங்கு இருக்க வேண்டும். ஒரே பெயரில் இரண்டு, மூன்று கல்லூரிகள் இருப்பதால், கல்லூரி பெயர், அதன் கோடு எண்ணை கவனமாக குறித்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்த்த பின், சான்றிதழ், பெயரில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாக அப்டேஷன் மையத்தில் சரிசெய்யலாம். போலி சான்றிதழுடன் விண்ணப்பித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்திற்கும் முன், மாணவர்களுக்கு எந்த பாடத்தில் விருப்பம் உள்ளது, எதை படித்தால் சரியாக வரும்? என்று பெற்றோர், அவர்களுடன் ஆலோசனை செய்து, முடிவெடுக்க வேண்டும், என்றார்.