பெண்கள் கல்லூரியில் முறைகேடுகள்: பிஷப் நடவடிக்கை
திருநெல்வேலி: நெல்லை கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில், கட்டடப்பணி, பேராசிரியர் நியமனம் ஆகியவற்றில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பிஷப் நடவடிக்கை எடுத்துள்ளார். நெல்லை சி.எஸ்.ஐ.,கிறிஸ்தவ சபை பிஷப் ஜெயபால் டேவிட் இங்கிலாந்து சென்றிருந்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த சமயம் ஒரு தரப்பினர் பிஷப் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் புதிய பேராசிரியர்கள் நியமனம், கட்டட நிதி முறைகேடு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக, பிஷப்பிற்கு தகவல்கள் வந்தன. பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில், பிஷப் ஜெயபால் டேவிட் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அங்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் புதிய கட்டட பணியில் ரூ 45 லட்சத்திற்கு பணிகள் நடந்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளனர். ஆனால், இதுவரையிலும் ரூ 25 லட்சத்திற்கு மட்டுமே பணிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, மீதமுள்ள தொகையில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரிக்க பிஷப் உத்தரவிட்டுள்ளார். அதே கட்டடத்திற்கு மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாததால், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தியுள்ளனர். பிஷப் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் கல்லூரியில், 13 பேராசிரியர்களை நியமித்துள்ளனர். அதில் 6 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே அந்த நியமனத்திற்கு தடை விதித்த பிஷப் அவர்களையும் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபோல, சி.எஸ்.ஐ.,நிர்வாகத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவை குறித்தும் விசாரிக்க பிஷப் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.