உள்ளூர் செய்திகள்

கல்விக்கடன் வழங்க வங்கிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பி.இ., மாணவனுக்கு கல்விக் கடன் வழங்க ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருக்கு, திருச்செந்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், கடந்த ஆண்டு பி.இ., படிப்பில் இடம் கிடைத்தது. கல்விக் கடன் கோரி கொல்லங்கோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாகூங்கர் கிளையை அணுகினார். கடன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்தனர். இதையடுத்து, கல்விக் கடன் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பிரேம்குமார் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல்கள் மகாவீர் சிவாஜி, நமோ நாராயணன் ஆஜராயினர். வங்கி தரப்பில் வக்கீல் குபேரன் ஆஜராகி, ‘வங்கி அதிகாரிகளுக்கு எதிராக மனுதாரர் புகார்கள் கொடுத்துள்ளார். எனவே அவருக்கு கடன் தொகை வழங்க முடியவில்லை. புகார்களை வாபஸ் பெற்றால் கல்விக் கடன் வழங்க தடை இருக்காது’ என்றார். இதையடுத்து, புகார்களை வாபஸ் பெற தயாராக இருப்பதாக மனுதாரரின் வக்கீல்கள் தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், ‘மூன்று நாட்களுக்குள் புகார்களை மனுதாரர் வாபஸ் பெற வேண்டும். அதன் பிறகு வங்கி அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இதையடுத்து ஒரு வாரத்தில் கல்விக் கடனை வங்கி அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்