பொறியியல் சேர்க்கை இடங்கள் மேலும் அதிகரிக்கும்
தமிழகத்தில் அண்ணா பல்கலை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கிவிட்டு, மற்ற இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பும். ஏற்கனவே கலந்தாய்வு துவங்கும் போது அரசு ஒதுக்கீட்டிற்கு இருந்த சேர்க்கை இடங்களை விட, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில் கலந்தாய்வு துவங்கிய பிறகு மேலும் பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளைத் துவக்க ஏஐடிசிஇ அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கை இடங்கள் அதிகரித்தன. மேலும், கலந்தாய்வு துவங்கிய பிறகு அனுமதி பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தங்களது கல்லூரியில் நிர்வாக அடிப்படையில் மாணவர்களை சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கல்லூரி பற்றி விளம்பரம் செய்ய போதிய அவகாசம் இன்மை, இவர்கள் சேர்க்கையை துவங்குவதற்குள் மாணவர்கள் மற்ற படிப்புகளில் சேர்ந்து விடுவார்கள் என்ற எண்ணம் போன்றவற்றால், சில சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தங்களது முழு மாணவ சேர்க்கையையும் அரசு ஒதுக்கீட்டிற்கு அளித்துள்ளது. இது மட்டுமல்லாமல், ஏஐசிடிஇ தொடர்ந்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அங்கீகார விண்ணப்பத்தை பரிசோதித்து அங்கீகாரம் அளித்து வருகிறது. இதனால் இன்னும் ஒரு வாரத்தில் மேலும் ஒரு சில பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று விடும். எனவே, சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர், இந்த கல்வியாண்டில் 50,000க்கும் மேற்பட்ட பொறியியல் சேர்க்கை இடங்கள் காலியாகவே இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், இப்போதைய நிலையைப் பார்த்தால் ஒரு லட்சம் இடங்கள் கூட காலியாகவே இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.