உள்ளூர் செய்திகள்

பயோ-செக்யூரிட்டி பாடத்தில் இரட்டை பட்டப்படிப்பு?

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, எந்தெந்த துறைகளில் இரு பல்கலையும் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை ஆராய, அடிலெய்ட் பல்கலை இணை முதல்வர் மைக்கேல் கெல்லர், கோவை வேளாண் பல்கலைக்கு வந்தார். அங்குள்ள ஒவ்வொரு துறையையும் பார்வையிட்ட அவர், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்தார். அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள திராட்சை மற்றும் பிற காய்கறிகளின் விளைச்சல், நோய் தாக்கும் திறன் உள்ளிட்டவைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார். பின், வேளாண் பல்கலையின் முதுகலைக் கல்வித்துறை முதல்வர் சந்திரபாபு மற்றும் பிற துறைத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், இரு பல்கலையும் இணைந்து ‘பயோ -செக்யூரிட்டி’ பாடத்தில் இரட்டை பட்டப்படிப்பு (டூயல் டிகிரி) முறையை கொண்டு வர முடியுமா என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், கரியமில வாயு அதிகரிப்பதால் உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த கரியமில வாயுவால், கோவை பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை கண்டறிய இரு பல்கலையும் இணைந்து ஆய்வு நடத்த முடியுமா  என்றும், விவசாய பயிர்களை தாக்கி அழிக்கும் பூச்சிகளை, உயிர்க்கொல்லி மருந்து கொண்டு அழிப்பது, வறட்சியை தாங்கும் பயிர்களை நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்