தலைமை ஆசிரியரால் பாதித்த மாணவிகளுக்கு கவுன்சிலிங்
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு மருத்துவ கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியில், மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது புகார் கூறப்பட்டது. கல்வித்துறை அவரை சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து தலைமறைவான அவர் சமீபத்தில் கோர்ட்டில் சரணடைந்தார். இந்நிலையில் அப்பள்ளி மாணவிகளுக்கு மனதளவில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மருத்துவ கவுன்சிலிங் அளிக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி மருத்துவத் துறைக்கு கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டாக்டர்கள் பள்ளிக்குச் சென்று அங்குள்ள சூழலை தெரிந்து கொள்வர். அதன்பின் குறிப்பிட்ட நாட்களில் மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் வழங்க உள்ளனர். இதனால் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றவர்களை மனதளவில் பாதிக்காமல் இருக்கும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கலெக்டர் சகாயம் நேற்று பொதும்பு பள்ளிக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தார். மாணவர்களிடம் கலந்துரையாடினார். அவர்களிடம், "தாய்மொழியான தமிழில் படித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம். தன்னம்பிக்கையும் வளரும். தாழ்வு மனப்பான்மை கூடாது. எந்தப் பதவிக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதை நிறைவேற்றும் வகையில் படிக்க வேண்டும்" என்றார்.